ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது
|வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்
வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்தியுடன் பதுங்கல்
வில்லியனூர் சாமியார் தோப்பு பகுதியில் வில்லியனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் அவர்களிடம் சோதனை செய்தபோது, ஒரு கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள், சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (23), கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த லலித்குமார் (26) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
வழிப்பறி செய்யும் நோக்கில் அவர்கள் கத்தியுடன் பதுங்கி இருந்தனரா? அல்லது யாரேனையும் கொலை செய்வதற்காக காத்திருந்தனரா? என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.