மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
|கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை ேபாலீசாா் கைது செய்தனா்.
பாகூர்
கடலூர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 21). இவர் மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டே கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணி செய்து வந்தார். சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்ப மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் மனோஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மருத்துவமனைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகம் படும்படி 2 நபர்கள் வருவதும் சிறிது நேரம் கழித்து மனோஜ்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (46) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவரையும் கைது செய்தனர். திருட்டுக்கு தூண்டுதலாக இருந்த மேட்டுப்பாளையம் குணசேகரனை போலீசார் தேடி வருகிறார்கள்.