ஸ்கூட்டர் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
|அரியாங்குப்பம் பகுதியில் ஸ்கூட்டர் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்த விமல் என்பவரது ஸ்கூட்டர் திருடு போனது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் வடலூர் நெய்வேலி மெயின் ரோட்டை சேர்ந்த அர்ஜுன் (வயது 21) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர், வீராம்பட்டினத்தில் ஸ்கூட்டர் ஒன்றை திருடியதாகவும், அதனை புதுச்சேரி பிரான்சுவா தோட்டம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் விற்றதாகவும் கூறினார். இதையடுத்து ஸ்கூட்டரை திருடிய அர்ஜுன் மற்றும் அதனை வாங்கிய கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.