ரூ.16 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
|திருக்கனூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கத்தியை காட்டி மிரட்டி...
திருக்கனூர் அருகே உள்ள விநாயகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 58). முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவர் தனது குடும்பத்தினருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு, கடந்த 10-ந் தேதி வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்து. இதனால் அதிர்ச்சியுடன் காளிதாஸ் உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்கள், காளிதாஸ் வருவதை பார்த்தவுடன், அவரை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
ரூ.16 லட்சம் நகை கொள்ளை
பின்னர் காளிதாஸ் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ஒருகிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.
இது குறித்து திருக்கனூர் போலீசில் காளிதாஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். காளிதாஸ் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இரும்பு கம்பியால் கதவு, பீரோவை உடைத்து, கைவரிசை காட்டியது தெரியவந்தது.
போலீஸ் தீவிரம்
கொள்ளையர்களை பிடிக்க, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணாடிப்பட்டு, வாதானூர், செட்டிப்பட்டு கிராமத்தில் சில மாதங்களுக்குமுன் பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு ஒரு மர்ம கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இடையில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கத்தி முனையில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.