14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும்
|ரேஷன்கடைகளை திறந்து 14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி
ரேஷன்கடைகளை திறந்து 14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
மாதர் சங்க மாநாடு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுவை பிரதேச 15-வது மாநாடு முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளனத்தில் நடந்தது. மாநாட்டு கொடியை பிரதேசக்குழு உறுப்பினர் பெரியநாயகி ஏற்றினார். சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தரராமன் மாநாட்டை தொடங்கிவைத்தார்.
மாநாட்டில் தமிழ்மாநில தலைவர் வாலண்டினா, செயற்குழு உறுப்பினர் சங்கர், பிரதேச செயலாளர் சத்தியா, பொருளாளர் கலையரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பாலியல் புகார் கமிட்டி
*விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வினை முழுமையாக குறைக்கவேண்டும்.
*அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் தெரிவிப்பதற்கு புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும்.
*போதைப்பொருட்கள் புழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக புதுச்சேரி உள்ளது. வரைமுறைகளை மீறி சாராயக்கடைகளை அமைப்பது, புதுவை அரசே மதுபான ஆலைகள் தொடங்க அழைப்பு விடுப்பது இளைஞர்களின் வாழ்வில் பேரிழப்பை ஏற்படுத்தும். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. ஆனால் அவர்கள் கையில் போதை பொருட்களை அரசு தாரை வார்க்கிறது. ஆகவே புதுச்சேரி அரசு மதுபான ஆலைகள் தொடங்க அனுமதிக்கக்கூடாது.
ரேஷன் அரிசி
*புதுவையில் ரேஷன்கடைகள் மூடப்பட்டு இலவச அரிசி வழங்கப்படாமல் உள்ளது. பக்கத்து மாநிலங்களான தமிழகம், கேரளாவில் 14 அத்தியாவசிய பொருட்கள் ரேஷன்கடைகளில் வழங்கப்படுகிறது. அதேபோல் புதுவையிலும் ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்கவேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.