13 பேருக்கு டெங்கு காய்ச்சல்
|கிருமாம்பாக்கம் அருகே 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பாகூர்
கிருமாம்பாக்கம் அருகே 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காய்ச்சல்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெயிலும் கொளுத்துகிறது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் பொதுமக்கள் காய்ச்சல், ஜலதோசம், இருமல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம் அருகே உள்ள காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெரு, கன்னியக் கோவில் மணப்பட்டு சாலை பகுதியில் வசிப்பவர்கள் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
13 பேருக்கு டெங்கு
தொடர் காய்ச்சல் இருந்தவர்களை சோதனை செய்தபோது அவர்களில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து சுகாதாரத்துறை டெங்கு மற்றும் மலேரியா நோய் பிரிவு அதிகாரிகள் நோில் பார்வையிட்டனர். அப்போது கிணறு மற்றும் சேதமடைந்த பொருட்களில் நல்ல தண்ணீர் தேங்கி நின்று டெங்கு கொசு புழுக்கள் அதிகமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், நிலவேம்பு கசாயமும் வழங்கினர்.