< Back
புதுச்சேரி
1,094 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
புதுச்சேரி

1,094 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

தினத்தந்தி
|
30 Aug 2023 10:28 PM IST

நடப்பு ஆண்டில் இதுவரை 1,094 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி

நடப்பு ஆண்டில் இதுவரை 1,094 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெங்கு காய்ச்சல்

புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்றவை பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த நோய்கள் வராமலும், பரவாமலும் தடுக்கலாம்.

1,094 பேர் பாதிப்பு

இந்த நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை கடுமையாக போராடி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 722 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரை 1,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளை காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

டெங்கு என்பது 4 ஜீரோ வகைகளுடன் ஏடிஸ் ஈகிப்ட் வகை கொசுவால் பரவும் வைரஸ் நோயாகும். சுத்தமான தண்ணீர் ஒரு வாரத்துக்கு மேல் தங்குவதால், அதில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உருவாக வாய்ப்பு உள்ளது. டெங்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தாமாகவே சரியாகிவிடும். அடுத்த நிலையில் கண் புருவங்களுக்கு பின் தாங்க முடியாத அளவில் தலைவலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி ஏற்படும். இதற்கு மூட்டு முறிவு காய்ச்சல் என்று பெயர்.

உயிருக்கு ஆபத்து

3-வதாக டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ் கிருமி ரத்த அணுக்களில் ஒன்றான ரத்த தட்டுகளை எந்தவிதமான அடியும்படாத நிலையில் ரத்தகசிவு உருவாவதற்கான காரணமாகிறது. இதனால் ரத்தநாடி மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது. கடைசியாக உடலில் தண்ணீர் சத்து குறைவு காரணமாக ரத்தநாடி மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது. இதை டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்று அழைக்கிறோம். கடைசி இரண்டும் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரசுக்கு தனி சிகிச்சை ஏதும் கிடையாது. டெங்கு காய்ச்சல் விட்ட பிறகு நமக்கு நன்றாகிவிடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி பாதிப்புகளை உடலில் நாம் உணராத வகையில் உருவாக்குவதாலும் காலதாமத சிகிச்சையாலும் பலி ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்கள் கொசு கடிக்காதவண்ணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். ஜன்னல்களில் வலைகள், கொசுவிரட்டி, மூலிகை கொசுவிரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் கொசு வராமல் தடுக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்