அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000
|அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.1000 வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் தாமதமின்றி நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 மாத அரிசி பணம்
புதுவை மாநில மக்களின் நல்வாழ்வுக்காக எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஏழை மக்கள் வாழ்க்கைத்தரம் உயர மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இதற்காக அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி குறித்த நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கான திட்டங்கள் நேரடி பணப்பரிமாற்ற திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கு இலவச வேட்டி-சேலைக்காக வழங்கப்பட்ட பணம் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 4 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்கான தொகை ரூ.43 கோடியே 85 லட்சமாகும். 10 கிலோ இலவச அரிசி, சர்க்கரைக்கான பணம் ரூ.15 கோடியே 25 லட்சத்து 37 ஆயிரமாகும்.
ரூ.1,000 உதவித்தொகை
கட்டிட தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு தொகையாக ரூ.1000 வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக எனது கவனத்துக்கு இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மத்திய அரசிடம் நாம் ரூ.2 ஆயிரம் கோடி கேட்டிருந்தோம். நமக்கு திருத்திய மதிப்பீட்டின் கீழ் ரூ.1,400 கோடியை வழங்குகிறது. இதனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்துவோம். இதில் ஜி.எஸ்.டி. இழப்பீடு, அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான தொகை உள்ளிட்ட பல்வேறு நிதிகள் உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களை ஏற்கனவே கண்டறிந்துள்ளோம். அங்கு இந்த ஆண்டு மழைவெள்ளம் தேங்காமல் இருக்கவும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். நேற்று கூட ரூ.15 கோடிக்கான பணிகளை தொடங்கி வைத்தேன். மழைக்காலம் முடிந்த பின் சாலைகள் நல்லமுறையில் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பை தொடர்ந்து மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1,200, சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,400 கிடைக்கும். இதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.