< Back
புதுச்சேரி
ஆழ்குழாய் கிணறு அமைக்க பெண்ணின் 10 வருட போராட்டம்
புதுச்சேரி

ஆழ்குழாய் கிணறு அமைக்க பெண்ணின் 10 வருட போராட்டம்

தினத்தந்தி
|
21 May 2022 10:51 PM IST

ஆழ்குழாய் கிணறு அமைக்க 10 வருடங்களாக முயன்ற பெண்ணின் போராட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையால் முடிவுக்கு வந்தது.

புதுச்சேரி

ஆழ்குழாய் கிணறு அமைக்க 10 வருடங்களாக முயன்ற பெண்ணின் போராட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையால் முடிவுக்கு வந்தது.

ஆழ்குழாய் கிணறு

புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் அட்டவணை இனத்தவர் விவசாயத்துக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்க 50 சதவீத மானியம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த சின்னையன் மனைவி கோவிந்தம்மாள் விண்ணப்பித்து இருந்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வேளாண்துறை அதை ஏற்றுக்கொண்டு, ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 720 பாசிக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மானியம் தவிர்த்து மீத தொகையான ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்தை கோவிந்தம்மாளும் செலுத்தினார்.

அலைக்கழிப்பு

ஆனால் பாசிக் நிறுவன அதிகாரிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்காமல் அலைக்கழித்தனர். பலமுறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. நாட்கள் செல்ல செல்ல விலையேற்றம் காரணமாக கூடுதலாக ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 500 செலுத்த கோவிந்தம்மாளுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

ஆனால் கோவிந்தம்மாள் பணம் செலுத்த மறுத்தார். தான் ஏற்கனவே முறையாக பணம் கட்டிவிட்டதால் காலதாமதத்துக்கு காரணம் தான் இல்லை என்றும் தெரிவித்தார்.

ரங்கசாமி உத்தரவு

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், பாசிக் மேலாண் இயக்குனர் சிவசண்முகம் ஆகியோர் கவனத்துக்கு கோவிந்தம்மாள் இந்த பிரச்சினையை கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து, மேற்கொண்டு தொகை எதுவும் பெறாமல் கோவிந்தம்மாள் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க அவர்கள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து கோவிந்தம்மாளின் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

10 வருட போராட்டத்துக்கு பின்பு ஏழைப்பெண்ணின் நியாயமான கோரிக்கையை ஏற்று அதிகப்படியாக ஆகும் செலவினை பாசிக் நிர்வாகமே ஏற்று செய்வதற்கு கோவிந்தம்மாள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், பாசிக் மேலாண் இயக்குனர் சிவசண்முகம் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்