காசாளர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை
|மதுக்கடை காவலாளி கொலை வழக்கில் காசாளர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காரைக்கால்
மதுக்கடை காவலாளி கொலை வழக்கில் காசாளர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அடித்து கொலை
காரைக்காலை அடுத்த கீழவாஞ்சூரில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நாகூர் பனங்குடி, சங்கமங்கலம் காலனியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 30) காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த கடையில் காரைக்கால் நிரவியை சேர்ந்த மனோஜ் (31) காசாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த 16.11.2019 அன்று இரவு கடையில் விமல்ராஜிக்கும், மனோஜிக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடந்த கைகலப்பில் காரைக்கால் நிரவியைச் சேர்ந்த காசாளர் மனோஜ், கடை ஊழியர்கள் காரைக்கால்மேடு கோபால் (43), தாமனாங்குடி அலெக்சாண்டர் (33) ஆகிய 3 பேரும் சேர்ந்து விமல்ராஜை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
படுகாயமடைந்த விமல்ராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும், பலனின்றி இறந்துபோனார். இது குறித்து, காரைக்கால் திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மனோஜ் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை காரைக்கால் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் நீதிபதி அல்லி தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மனோஜ், கோபால், அலெக்சாண்டர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டனர்.