< Back
புதுச்சேரி
10 பேருக்கு டெங்கு பாதிப்பு
புதுச்சேரி

10 பேருக்கு டெங்கு பாதிப்பு

தினத்தந்தி
|
16 Sept 2023 9:09 PM IST

காரைக்காலில் 10 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால்

காரைக்காலில் 10 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் தீவிரம்

புதுச்சேரியில் 75-க்கு மேற்பட்டோருக்கு டெங்கு கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கல்லூரி மாணவி உள்பட 2 பேர் டெங்குவிற்கு பலியாகியுள்ளனர். காரைக்காலில் இம்மாதம் மட்டும் 10 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

டெங்கு கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட நலவழித்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில், நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தேனாம்பிகை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் .சேகர் ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதன்படி, காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள வீராச்சாமி நாயக்கர் வீதியில் ஆய்வு மேற்கொண்ட ஊழியர்கள், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு, புழுக்களை கண்டறிந்து அகற்றினர். மேலும் நீர் தேங்கும் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகளை கண்டறிந்து அகற்றினர். முதிர்ந்த கொசுக்களை அழிக்க புகை மருந்து அடிக்கப்பட்டது.

தீவிர நடவடிக்கை

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 80 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 30 பேர் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள். காரைக்காலை சேர்ந்தவர்கள் 50 பேர் ஆவர். இந்த மாதம் மட்டும் இதுவரை காரைக்காலை சேர்ந்த 6 பேர், அண்டை மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் வீட்டையும், சுற்றுபுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு, தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்