< Back
புதுச்சேரி
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 10 பேர் கைது
புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 10 பேர் கைது

தினத்தந்தி
|
27 May 2022 11:14 PM IST

வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்

வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருக்கனூரை அடுத்த தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த சதீஷ் (வயது 18), அஜய் (18), ஆகாஷ் (24) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 216 கிராம் அளவுள்ள 35 கஞ்சா பாக்கெட்டுகளும், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு...

இதேபோல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக மணக்குள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குரு (20), வேலு (25) ஆகியோரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தவளக்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் அருகிலுள்ள தேடுவார்நத்தம் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கொண்ட கும்பலை தவளக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் நல்லவாடு குமரகுரு (19), தானம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (20), கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா (23), மணமேடு சேர்ந்த அருள்குமரன் (26), நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்