புனேயில் பொதுவான அறிகுறிகள் இல்லாமல் பரவும் ஜிகா வைரஸ்.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
|பொதுவான அறிகுறிகளை ஏற்படுத்தாமல் ஜிகா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புனே:
மராட்டிய மாநிலம், புனேயின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் அறிகுறியுடன் உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், அவரது மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புனே நகரில் ஜிகா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்பின்னர் எரண்ட்வானே பகுதியில் உள்ள ஒரு கர்ப்பிணி மற்றும் அருகில் உள்ள முந்த்வா பகுதியில் இரண்டு பேர் என மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் சிலரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் நோய் பரவுகிறது. உடலுறவு, ரத்த பரிமாற்றம் மூலமாக மற்றவர்களுக்கு பரவும். தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிடமிருந்து அவளது கருவுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், அரிப்பு, மூட்டு வலி போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படும்.
ஆனால் புனே நகரில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவான அறிகுறிகள் தென்படவில்லை, ஆனால் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஒத்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
சுமார் 80 சதவீத பாதிப்புகள் அறிகுறியற்றவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிகா வைரசுக்கான அறிகுறிகள் பொதுவாக லேசாக காணப்படுகின்றன. பெரும்பாலான அறிகுறிகள் டெங்கு காய்ச்சலை ஒத்திருக்கும். மேலும் காய்ச்சல், கண்கள் சிவந்து காணப்படுதல், மூட்டு வலி, தலைவலி மற்றும் மாகுலோபாபுலர் சொறி ஆகிய அறிகுறிகளும் இருக்கும், என புனே மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுருச்சி மந்த்ரேகர் தெரிவித்தார்.
திடீர் வானிலை மாற்றங்கள், சுற்றுப்புறங்களில் உள்ள வடிகால் அடைப்பு, தண்ணீர் தேங்குதல், தனிப்பட்ட சுகாதார நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஜிகா வைரஸ் பரவுகிறது என்று டி.பி.யு. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு டாக்டர் திக்விஜய் அட்கே கூறுகிறார்.
இவ்வாறு பொதுவான அறிகுறிகளை ஏற்படுத்தாமல் ஜிகா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிகா வைரசுக்கான குறிப்பிட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை. இருப்பினும், பூச்சி விரட்டி, உடலின் பெரும்பகுதியை ஆடை மற்றும் கொசுவலையால் மூடுதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு நோய் பரவாமல் தடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.