மயில் கறிக்குழம்பு வீடியோவால் போலீசில் சிக்கிய யூடியூபர்
|பாரம்பரிய மயில் குழம்பு செய்வது குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா,
தெலுங்கானா மாநிலம், சிரிசில்லா பகுதியை சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார். இவர் தனது யூடியூப் சேனலில் சமையல் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பாரம்பரிய முறையில் மயில் குழம்பு செய்வது எப்படி..? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பிரனய் குமாரின் வீட்டை சோதனையிட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரனய் குமார் சமையலுக்கு பயன்படுத்திய இடத்தை ஆய்வு மேற்கொண்ட போலீசார், அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள தேசிய பறவையான மயிலை சாப்பிட்டது உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது. மேலும், பிரனய் குமாரின் யூடியூப் தளத்தில் இருந்து மயில் குழம்பு தொடர்பான காணொலியையும் போலீசார் நீக்கியுள்ளனர்.
எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரனய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.