'உங்கள் சண்டை என்னோடுதான்; என் பெற்றோரை துன்புறுத்தாதீர்கள்' - கெஜ்ரிவால்
|தன்னுடனான சண்டையில் தனது பெற்றோரை துன்புறுத்த வேண்டாம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தனது பெற்றோரை இந்த விவகாரத்தில் சேர்த்து அவர்களை துன்புறுத்த வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
"பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் எனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களை ஒவ்வொருவராக கைது செய்தீர்கள். பின்னர் எனது மந்திரிகளை கைது செய்தீர்கள், அப்போதும் நான் கலங்கவில்லை. இதைத் தொடர்ந்து என்னையும் கைது செய்து திகார் சிறையில் வைத்து அழுத்தம் கொடுத்தீர்கள்.
ஆனால் இப்போது எனது பெற்றோரை குறி வைக்கிறீர்கள். எனது தாயாருக்கு உடல்நலம் சரியாக இல்லை. மேலும் அவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். எனது தந்தைக்கு 85 வயதாகிறது. அவரால் சரியாக கேட்கக் கூட முடியாது.
எனது பெற்றோர் ஏதேனும் குற்றம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? எதற்காக அவர்களை துன்புறுத்துகிறீர்கள்? உங்கள் சண்டை என்னோடுதான், அவர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எனது பெற்றோரை விட்டுவிடுங்கள். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்."
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.