யோகா ஆசிரியையின் உயிரைக் காத்த மூச்சுப்பயிற்சி; ஹாலிவுட் பட பாணியில் நடந்த திகில் சம்பவம்
|மண்ணுக்குள் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியை மூச்சுப்பயிற்சி மூலம் உயிர்பிழைத்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு,
கடந்த 2003-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கில் பில்'(Kill Bill). இந்த படத்தில் கதாநாயகியை சிலர் உயிருடன் மண்ணுக்குள் புதைப்பது போலவும், அவர் தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையை பயன்படுத்தி மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்புவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், நிஜத்தில் இதே பாணியில் கர்நாடக மாநிலத்தில் ஒரு திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கு தனது கணவர் ஒரு யோகா ஆசிரியையுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தனது நண்பரான சதீஷ் ரெட்டி என்பவரிடம் பிந்து கூறியுள்ளார். பெங்களூருவில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சதீஷ் ரெட்டி, சம்பந்தப்பட்ட யோகா ஆசிரியையிடம் சென்று யோகா கற்றுக்கொள்வது போல் நடித்து அவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
34 வயதான அந்த யோகா ஆசிரியை சதீஷை முழுமையாக நம்பியிருக்கிறார். அவர் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு சதீஷ் தவறாமல் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 23-ந்தேதி, திபுரஹல்லி பகுதியில் உள்ள யோகா ஆசிரியையின் வீட்டுக்குச் சென்ற சதீஷ், அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் சதீஷின் நண்பர்கள் 3 பேர் மற்றும் பிந்து ஆகியோர் காரில் ஏறியுள்ளனர்.
இவர்கள் 5 பேரும் சேர்ந்து யோகா ஆசிரியை மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரை ஒரு காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று, அவரது ஆடைகளை களைந்துள்ளனர். அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சமயோசிதமாக செயல்பட்ட யோகா ஆசிரியை, தனது மூச்சை சிறிது நேரம் கட்டுப்படுத்தி மயக்கமடைந்தது போல் நடித்துள்ளார்.
யோகா ஆசிரியை உயிரிழந்துவிட்டார் என நினைத்து, அவரை அங்கேயே அவசர அவசரமாக ஒரு குழியை தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த யோகா ஆசிரியை, தனக்கு தெரிந்த மூச்சுப்பயிற்சியை பயன்படுத்தி தனது மூச்சை கட்டுப்படுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உதவி கேட்டு ஆடைகளை வாங்கி அணிந்து கொண்ட அவர், தனக்கு நடந்த சம்பவம் குறித்து நேராக காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த போலிசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட புகார் தொடர்பாக பிந்து, சதீஷ் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.