'பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது' - ஜே.பி.நட்டா
|பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் இன்று யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுகான், நிதின் கட்கரி, எச்.டி.குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, அஷ்விணி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பல்வேறு மந்திரிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.நா. பொது சபையில் சர்வதேச யோகா தினம் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார். அவருக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்வில் யோகாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.