< Back
தேசிய செய்திகள்
ஒர்லி கார் விபத்து; சட்டவிரோத கட்டுமானம்... மதுபான பாரை இடித்து தள்ளிய அதிகாரிகள்
தேசிய செய்திகள்

ஒர்லி கார் விபத்து; சட்டவிரோத கட்டுமானம்... மதுபான பாரை இடித்து தள்ளிய அதிகாரிகள்

தினத்தந்தி
|
10 July 2024 5:07 PM IST

மராட்டியத்தில் ஒர்லி கார் விபத்துடன் தொடர்புடைய மதுபான பார் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதும், 25 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மதுபானம் வழங்கியதும் தெரிய வந்துள்ளது.

புனே,

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகவா (வயது 50). இவருடைய மனைவி காவேரி நகவா (வயது 45). கடந்த ஞாயிற்று கிழமை காலை 5.30 மணியளவில் மனைவியுடன் மீன் வாங்க ஸ்கூட்டரில் சென்றபோது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. கார் இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதீப் தரையில் விழுந்த நிலையில், காவேரி 2 கி.மீ. தொலைவு வரை காரில் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டார்.

காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

விபத்துக்கு பின் மிஹிர் ஷா தப்பியோடி விட்டார். இந்நிலையில், ராஜேஷ் ஷா மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ராஜரிஷி ராஜேந்திர சிங் பிஜாவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 72 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்தனர்.

சம்பவத்தன்று, மிஹிர் ஷாவுடன் அவருடைய நண்பர்கள் 4 பேர் பாருக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பீர் குடித்துள்ளனர் என பாரின் மேலாளர் கரண் ஷா கூறினார். இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய மிஹிர் ஷா சென்ற, தனியார் மதுபான பாருக்கு கலால் துறையினர் நேற்று சீல் வைத்து மூடினர்.

ஜுகுவில் உள்ள இந்த பாரின் உரிமையாளர்கள், கலால் துறையின் விதிகளை காற்றில் பறக்க விட்டனர் என்பது 2 நாள் விசாரணைக்கு பின்னர் தெரிய வந்ததும், இந்த பாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பாரை மூடுவதற்கான காலக்கெடு மற்றும் கலால் துறை விதிகளை மீறும் பார்கள் மூடப்படுவதுடன், அவற்றின் உரிமங்கள் திரும்ப பெறப்படும் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்து நடப்பதற்கு முன், நண்பர்களுடன் சேர்ந்து பாரில் மிஹிர் ஷா செலவிட்ட தொகை ரூ.18 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. அதற்கான பில் தொகையை மிஹிர் ஷாவின் நண்பர் செலுத்தி உள்ளார்.

இந்த மதுபான பார் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மராட்டியத்தில் 25 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மதுபானம் வழங்கியது சட்டப்படி தவறு. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டதுடன், முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. மதுபான பாரானது, சட்டவிரோத வகையில் கட்டுமானம் செய்யப்பட்ட விவரமும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை இடித்து தள்ள இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மும்பை வெளிநாட்டு மதுபான சட்டவிதிகளின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் அவற்றின் ஒரு பகுதியை இன்று இடித்து தள்ளியுள்ளனர்.

மேலும் செய்திகள்