< Back
தேசிய செய்திகள்
மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள்
தேசிய செய்திகள்

மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள்

தினத்தந்தி
|
7 March 2025 11:58 AM IST

மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

புதுடெல்லி,

பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், நாளை குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணியில் முழுக்க, முழுக்கப் பெண் போலீஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட உள்ளனர். மகளிர் தினத்தையொட்டி இது சிறப்பு ஏற்பாடாக கருதப்படுகிறது.

இது குறித்து குஜராத்தின் உள்துறை இணை மந்திரி ஹர்ஷ் சங்வி கூறும்போது, சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நவ்சாரியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் பாதுகாப்புப் பணியில் பெண் போலீஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது மாதிரியான ஏற்பாடு இந்திய வரலாற்றில் முதல் முயற்சி ஆகும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, குஜராத் காவல்துறை ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்து வருகிறது.

பிரதமர் மோடி நவ்சாரியின் வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியது முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரையிலும் பெண்கள் மட்டுமே பாதுகாப்ப் பணியில் இருப்பர். இந்த காவல் பணியில் உள்ள பெண்களில் குஜராத் காவல்துறையினரின் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 2,100 கான்ஸ்டபிள்கள், 187 சப்-இன்ஸ்பெக்டர்கள், 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளில், 16 துணை போலீஸ் காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் மற்றும் கூடுதல் டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியும் இடம்பெற உள்ளானர்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் இவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, குஜராத்தின் மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியும் உள்துறை செயலாளருமான நிபுனா டோரவனேவிடம் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முயற்சி மகளிர் தினத்தன்று சர்வதேச அளவில் ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவதில் பெண்களின் பங்கு என்ன என்பதையும் இது விவரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்