தேசிய செய்திகள்
குளிர்சாதன பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

குளிர்சாதன பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
11 Jan 2025 5:34 AM IST

குளிர்சாதன பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகர் விருந்தாவன் காலணியை சேர்ந்தவர் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா. இவர் இந்தூரில் வசித்து வரும் நிலையில், தேவாஸ் நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

அந்த வீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் படிதார் என்பவர் வாடகைக்கு குடியேறியுள்ளார். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு சஞ்சய் படிதார் வீட்டை காலி செய்துள்ளார். இருப்பினும் அந்த வீட்டின் ஒரு அறையில் மட்டும் அவருக்கு சொந்தமான சில பொருட்கள் இருந்துள்ளன.

அந்த பொருட்களை விரைவில் எடுத்துவிடுவதாக சஞ்சய் படிதார் கூறிய நிலையில், வீட்டின் உரிமையாளர் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா அந்த அறையை மட்டும் பூட்டிவிட்டு, வீட்டை வேறொரு நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அறையை திறந்து பார்த்த தீரேந்திர ஸ்ரீவஸ்தவா, அந்த அறையின் மின் இணைப்பை துண்டித்து விட்டு அறையை பூட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்து அந்த அறையை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த குளிர்சாதன பெட்டிக்குள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீரேந்திர ஸ்ரீவஸ்தவா, இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அந்த வீட்டில் குடியிருந்த சஞ்சய் படிதாரை கைது செய்த போலீசார், அவரிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்