< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
13 Aug 2024 9:29 AM GMT

பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Live Updates

  • 13 Aug 2024 1:19 PM GMT

    மருத்துவக்கல்லூரிகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

    நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவக்கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.

  • 13 Aug 2024 12:33 PM GMT

    கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

  • 13 Aug 2024 10:52 AM GMT

    மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மேற்கு வங்க அரசு

    போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால்  மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மேற்கு வங்க அரசு  கேட்டுக்கொண்டுள்ளது.

    பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்க அரசு போராடும் மருத்துவர்களுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

  • 13 Aug 2024 10:45 AM GMT

    பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக மேற்கு வங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றனர்.

  • குற்றவாளியை காப்பாற்ற மே.வங்க அரசு முயற்சி: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
    13 Aug 2024 10:32 AM GMT

    குற்றவாளியை காப்பாற்ற மே.வங்க அரசு முயற்சி: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்தக்கது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு தடுமாறி கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலை மாநிலத்தில் மோசமாக உள்ளது. மாநில அரசுக்கு எந்த திறனும் இல்லை” என்றார்.

  • 13 Aug 2024 10:10 AM GMT

    பயிற்சி பெண் மருத்துவர் கொலை  வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று  கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

  • 13 Aug 2024 10:06 AM GMT

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ம் தேதி காலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர், 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்த சூழலில் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்களும் இருக்கக்கூடும் என சக டாக்டர்கள் மற்றும் கொல்லப்பட்ட டாக்டரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மேற்கு வங்காள அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்