கர்நாடகாவில் குடிபோதையில் இளைஞர் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் பெண் பலி
|கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
குடிபோதையில் இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில் 30 வயது பெண் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது, சந்தியா என்ற 30 வயது பெண் கடந்த சனிக்கிழமையன்று பரபரப்பான மைசூரு சாலையில் கெங்கேரி போக்குவரத்து மேலாண்மை மையம் அருகே சாலையை கடக்கும்போது, சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியது. மேலும் அது ஒரு பைக் மீது மோதியது.
விபத்துக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றார், ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரை வலைத்து பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து, காயமடைந்த பெண் மற்றும் பைக் ஓட்டுநர் சையத் அர்பாஸ் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காயமடைந்த பெண் சந்தியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை ஓட்டிய தனுஷ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தனுஷ் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கைது செய்யப்பட்ட தனுஷின் தந்தை தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.