உண்மையை மறைத்து ஆட்கொணர்வு மனு.. பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
|குழந்தையை தந்தைவழி தாத்தா- பாட்டி வளர்த்து வருவதாக கணவரின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
மகளின் இருப்பிடம் தெரிந்திருந்தும், உண்மையை கூறாமல் மகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்காக, பெண் ஒருவருக்கு டெல்லி ஐகோர்ட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செயத்து.
அந்த பெண்ணின் மனு சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும், 10,000 ரூபாயை டெல்லி ஐகோர்ட்டின் சட்ட சேவைகள் குழுவிடம் மனுதாரர் 2 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த பெண், ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவில், தனது கணவரின் குடும்பத்தினரால் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், அதனால் அந்த வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அக்டோபர் மாதம் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றபோது மகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை அதற்கு நேர்மாறாக இருந்தது. அதில், ஜனவரி 10-ம் தேதி அந்தப் பெண் தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரை காணவில்லை என்று கணவர் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் கணவரின் புகாரைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர், மற்றும் மாமனார்-மாமியாருடன் போலீஸ் அதிகாரிகள் அவரைத் தேடி மும்பைக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண் மற்றொரு நபருடன் ஒரு ஓட்டலில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கோர்ட்டில் விசாரணை நடந்தபோது இந்த உண்மைகளை அந்த பெண் மறுக்கவில்லை.
மேலும், அவரது குழந்தையை தந்தைவழி தாத்தா- பாட்டி வளர்த்து வருவதாக கணவரின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த பெண் ஆகஸ்ட் மாதம் பிறந்தநாளன்று மகளை சந்தித்ததாக அவரது வழக்கறிஞர் கூறினார், ஆனால் இந்த உண்மை அவரது மனுவில் குறிப்பிடப்படவில்லை. இப்படி உண்மைகளை மறைத்ததால் ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், அபராதமும் விதித்தனர்.