< Back
தேசிய செய்திகள்
3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
24 July 2024 3:12 PM IST

குஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூதாட்டி மற்றும் அவரது இரண்டு பேத்திகள் உயிரிழந்தனர்.

ஆமதாபாத்,

நவ்சாரி, ஜுனாகத், தேவபூமி துவாரகா, கட்ச், டாங்ஸ், தபி உள்ளிட்ட தெற்கு குஜராத் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வழிவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஜம் கம்பாலியா நகரில், நேற்று மாலை பெய்த கனமழையில், அங்கிருந்த பாழடைந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு மூதாட்டி மற்றும் அவரது இரண்டு பேத்திகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஆறு மணிநேர மீட்புப் பணிகளுக்கு பின்னர் அவர்கள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் கேஷர்பென் கஞ்சாரியா (65 வயது), அவரது பேத்திகள் பயல்பென் கஞ்சாரியா (18 வயது), பிரிதிபென் கஞ்சாரியா (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்