< Back
தேசிய செய்திகள்
அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது - அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்
தேசிய செய்திகள்

'அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது' - அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்

தினத்தந்தி
|
19 Dec 2024 5:52 AM IST

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் , ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தி.மு.க .எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'ஜெய் பீம்' என முழக்கமிட்டனர். இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடு முழுவதும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா தன்னுடைய பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து திரித்து சிலர் குறை சொல்கிறார்கள். மோடியின் அரசாங்கம்தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அம்பேத்கரை பற்றி நேரு குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. ஆனால் அம்பேத்கரின் வரலாற்று புகழை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்றது பா.ஜ.க. அரசுதான். அம்பேத்கர் குறித்து எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும்" என்று அமித் ஷா விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது, "அம்பேத்கர் பற்றி பா.ஜனதா கட்சியின் உள் மனதிற்குள் இருக்கும் கருத்துகளையும், நிலைப்பாட்டையும் பகிரங்கமாகவும், மிகுந்த தைரியத்துடனும் வெளிப்படுத்தியதற்காக உங்களை (அமித்ஷா) வரவேற்கிறேன். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் வைத்தே அம்பேத்கருக்கு எதிராக பேசி இருக்கிறீர்கள்.

நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசிய கருத்துகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறி மனசாட்சிக்கு துரோகம் செய்ய வேண்டாம். அம்பேத்கர், இந்த நாட்டுக்காக ஆற்றிய சமூக பணிக்காக, அவரது வழியில் செயல்படும் கோடிக்கணக்கான மக்கள் உங்களது கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டார்கள். அம்பேத்கர் போன்ற ஒருவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்றால், என்னை போன்றவர்கள் முதல்-மந்திரியாகி இருக்க வாய்ப்பில்லாமல் போய் இருக்கும். மல்லிகார்ஜுன கார்கே இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருக்க முடியாது.

அம்பேத்கர் வகுத்து கொடுத்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நீங்களும் மத்திய உள்துறை மந்திரியாக இருக்கிறீர்கள். அம்பேத்கர் மட்டும் இல்லை என்றால் நீங்கள் எங்கேயோ பழைய இரும்பு கடையை வைத்து கொண்டு இருக்க வேண்டும்.

இந்த நாட்டின் பிரதமரான, உங்களது நண்பர் மோடி ரெயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டு தான் இருக்க வேண்டும். அம்பேத்கர் இல்லையெனில், மோடி பிரதமர் ஆகி இருக்க முடியாது. பாபாசாகேப்பின் பார்வைதான் நம் அனைவரையும் உயர்த்தியது. பிரதமர் கூட இதை ஒப்புக்கொள்ளலாம், நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை, அவர் இருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதற்காக ஒப்புக் கொள்ளவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. பா.ஜனதா கட்சியும், சங் பரிவார் அமைப்புகளும் மோடி, மோடி, மோடி என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. மோடியின் பெயரை அத்தனை முறை சொல்வதற்கு பதில் கடவுள் பெயரை சொல்லி இருந்தால், ஏழு ஜென்மம் மட்டும் அல்ல, நூறு ஜென்மத்திற்கு சொர்க்கத்திற்கு செல்லலாம்" என்று அதில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்