< Back
தேசிய செய்திகள்
பசுவைக் கடத்தினால் சுட உத்தரவிடுவேன்: கர்நாடக மந்திரி எச்சரிக்கை
தேசிய செய்திகள்

பசுவைக் கடத்தினால் சுட உத்தரவிடுவேன்: கர்நாடக மந்திரி எச்சரிக்கை

தினத்தந்தி
|
4 Feb 2025 4:17 PM IST

பசுக்களை வளர்ப்பவர்களைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுவோம், பயப்படத் தேவையில்லை என்று கர்நாடக மந்திரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் பசுக்களை திருடும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், ஹொன்னாவர் அருகே கர்ப்பிணிப் பசுவை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தர கன்னட மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியான வைத்யா செய்தியாளர்களுடன் பேசியதாவது,

"பசு திருட்டு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று போலீஸ் கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளேன். நாம் பசுக்களை வணங்குகிறோம்.

பசுக்களை கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், சாலையில் வைத்து சுடப்படுவார்கள் என்று நான் எச்சரிக்கை விடுக்கிறேன். வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுங்கள், மாவட்டத்தில் போதுமான வேலைகள் உள்ளன. ஆனால், பசு கடத்துவதை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டோம்.

பாஜக ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது அரசை பாஜகவினர் குறிவைக்கின்றனர். இதுபோன்ற செயல்களை நாம் ஆதரித்தால், எப்.ஐ.ஆர் மற்றும் கைதுகள் எப்படி நடக்கும்? நாங்கள் அமைதியாக இருக்கவில்லை.

இந்த பிரச்சினையில் அரசாங்கமோ, முதல்-மந்திரியோ அல்லது உள்துறை மந்திரியோ யாரையும் ஆதரிக்க மாட்டார்கள். பசுக்களை வளர்ப்பவர்களைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுவோம், பயப்படத் தேவையில்லை". இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்