'கருப்பாக இருக்கிறாய்...' கேலி செய்ததுடன் கணவனை பிரிந்து சென்ற மனைவி
|திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், நிறத்தை காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால் மோகியா(24). இவருக்கு கடந்த வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஷால் மோகியா, கருப்பாக இருப்பதால், திருமணமானது முதல் மனைவி அவரை கிண்டல் செய்து வந்துள்ளார். அத்துடன், நிறத்தை காரணம் காட்டி அடிக்கடி அவருடன் சண்டையிட்டும் வந்துள்ளார்.
இதற்கிடையில், விஷால் மோகியாவின் மனைவிக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குழந்தையை கணவனின் வீட்டில் வைத்துவிட்டு அந்த பெண், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்கு விஷால் மோகியா சென்றபோது, நிற பிரச்சினையை காரணம் காட்டி கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
இதையடுத்து விஷால் மோகியா, தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் சனிக்கிழமை அன்று இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், நிறத்தை காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.