அரசு ஊழியரின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கண் முன்னே மரணித்த மனைவி... அதிர்ச்சி வீடியோ
|ராஜஸ்தானில் உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்து கொள்வதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற கணவர் முடிவு செய்துள்ளார்.
கோட்டா,
ராஜஸ்தானின் கோட்டா நகரில் மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றியவர் தேவேந்திர சாண்டல். இவருடைய மனைவி டீனா. இருதய நோயாளியான டீனாவை கவனித்து கொள்வதற்காக ஓய்வு காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் வழியனுப்பு விழா நடந்துள்ளது. இதற்காக, மனைவியுடன் மாலையிட்டு வந்த அவர் உறவினர்கள், நண்பர்கள் சூழ அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது சுற்றியிருந்தவர்கள் புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும்படி தம்பதியை கேட்டு கொண்டனர். இதனால், இருவரும் எழுந்து நின்றனர். அப்போது, நிற்க சிரமப்பட்ட டீனா மயக்கம் வருவதுபோல் இருக்கிறது என கணவரிடம் கூறியிருக்கிறார். அவரை அமர வைத்து விட்டு, தண்ணீர் கொண்டு வரும்படி கூடியிருந்தவர்களிடம் கணவர் கூறியிருக்கிறார்.
சிலர், டீனாவை புகைப்படத்திற்கு ஏதுவாக புன்னகைக்கும்படி கூறியுள்ளனர். டீனாவும் அதற்கு ஏற்ப சிரிக்க முயன்று, முடியாமல் மேசை மீது சரிந்து விழுந்துள்ளார். இதனால், பயந்து போன கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனடியாக டீனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், வரும் வழியிலேயே டீனா உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர். உடல்நிலை சரியில்லாத டீனாவுக்காக அவருடைய கணவர், முன்பே ஓய்வு பெற்று அவரை கவனித்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், அது சோகத்தில் முடிந்துள்ளது. இந்த காட்சி அடங்கிய வீடியோ பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.