வெங்காயம் விலை விரைவில் குறையும் - மத்திய அரசு தகவல்
|காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் வெங்காயம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 வரை சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காய விலை ஏற்றம் இல்லத்தரசிகளுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விநியோகித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் 4.5 லட்சம் டன் வெங்காயம் இருந்தது. இதில் 1.5 லட்சம் டன் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் டெல்லி, சென்னை, குவாஹாட்டி ஆகிய நகரங்களுக்கு 4,850 டன் வெங்காயம் ரெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் தொழிலாளா்கள் விடுப்பில் சென்றது, மண்டிகள் மூடப்பட்டது போன்ற காரணத்தால் விநியோகம் தடைபட்டு வெங்காயத்தின் திடீா் விலை உயா்வு ஏற்பட்டது. காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. எனவே, வெங்காயம் விலை விரைவில் குறைந்துவிடும். தேவையைவிட மிகுதியாகவே வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.