< Back
தேசிய செய்திகள்
ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன்? - செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
தேசிய செய்திகள்

ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன்? - செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

தினத்தந்தி
|
2 Dec 2024 12:19 PM IST

செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் விசாரணை பாதிக்கும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையும் இருந்ததால் அமலாக்கத் துறையும் இந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனையடுத்து சிறையில் 243 நாட்கள் வரை இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி தொடர்ந்தார். அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நிறுத்தி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பல முறை ஜாமீன் மனு ரத்தான நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த 3 நாட்களில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. இதன்படி அவர் ஏற்கெனவே வகித்த மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஓகா, "மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது..? என்னதான் நடக்கிறது. அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு இதனால் அழுத்தம் உருவாகாதா.? " என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பின்னர் இதற்கான விளக்கத்தை பிரமாண பத்திரமாக அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் விசாரணை பாதிக்கும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அரசியல் உள்நோக்கம், காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்