< Back
தேசிய செய்திகள்
மிசா காலத்தில் சோனியா காந்தி தங்கிய இடம் எது...? பா.ஜ.க. தலைவர் தகவல்
தேசிய செய்திகள்

'மிசா' காலத்தில் சோனியா காந்தி தங்கிய இடம் எது...? பா.ஜ.க. தலைவர் தகவல்

தினத்தந்தி
|
25 Jun 2024 6:29 PM IST

காங்கிரஸ் ஆட்சியின்போது, கடந்த 70 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட முறை அரசியல் சாசனம் திருத்தப்பட்டு உள்ளது என பா.ஜ.க. மூத்த தலைவர் நரோட்டம் மிஷ்ரா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டனர். அவர்களில் மீதமுள்ளவர்கள் இன்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் எம்.பி.யாக இன்று பதவியேற்று கொண்டார். அப்போது அவர் அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் பிடித்தபடி காணப்பட்டார்.

இந்நிலையில், நாட்டில் நெருக்கடி நிலையின்போது, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை கவுரவிக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி. ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில், மத்திய பிரதேச முன்னாள் உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, 1975-ம் ஆண்டில், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிறப்பிப்பது என முடிவு செய்தபோது, பிரதமர் இல்லத்தில் இருந்தவர் சோனியா காந்தி.

இன்று, அவருடைய மகனுடன் சேர்ந்து கையில் அரசியல் சாசன நகலை வைத்து கொண்டு இருக்கிறார். இதுவே காங்கிரசின் உண்மையான முகம் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது 100-க்கும் மேற்பட்ட முறை அரசியல் சாசனம் திருத்தப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் தற்போது மக்களை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

கருப்பு நாளை சந்திக்காதவர்களுக்காக நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த உண்மை நிலையை எடுத்து கூற, நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என்றும் அவர் அப்போது கூறினார்.

மேலும் செய்திகள்