ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்
|தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. கோவிலில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாதாரண பொதுப் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து பல முடிவுகளை எடுத்துள்ளது. பக்தர்கள் இதை மனதில் வைத்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க ேவண்டும், எனக் கேட்டுக் கொள்கிறோம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவுகள் வருமாறு:-
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கோவிலுக்குள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த 10 நாட்களுக்கு சிறிய குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) போன்றவர்களின் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
புரோட்டோகால் பிரபலங்களை தவிர 10 நாட்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், அதிகபட்ச பக்தர்களை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவிந்த மாலை அணிந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
தரிசன டோக்கன்கள், அனுமதிசீட்டு உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
ஒதுக்கப்பட்ட நேரப்படி பக்தர்கள் தரிசன வரிசையை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி அன்று முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அதிகாரிகள், முன்னாள் அரசியல் தலைவர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை. 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
3000 இளம் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர்கள், வழிகாட்டிகள் தேவைக்கேற்ப அமர்த்தப்படுவார்கள். அவர்களின் சேவைகள் தரிசன வரிசைகளை நிர்வகிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.