< Back
தேசிய செய்திகள்
கோடீஸ்வர வரி விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி
தேசிய செய்திகள்

கோடீஸ்வர வரி விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி

தினத்தந்தி
|
13 July 2024 9:03 AM IST

ஜி20 நாடுகள் கோடீஸ்வரர்களுக்கு 2 சதவீத சொத்துவரி விதிக்க திட்டமிட்டு உள்ளன.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்கால முதல் பட்ஜெட் வருகிற 23-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி ஆகியோர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை அடுக்கி உள்ளது.இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதனால் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.ஆனால் அப்படி நடந்திருந்தால், பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய எந்திரமாக கருதப்படும் தனியார் முதலீடு இன்னும் கடும் மந்தமாக இருப்பது ஏன்? கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மிகவும் குறைந்திருக்கிறது.மற்றொரு முக்கிய என்ஜினான தனியார் நுகர்வு சீரடையாதது ஏன்?

குடும்பங்களின் சேமிப்பு சாதனை அளவுக்கு இறங்கி, கடன் உச்சத்துக்கு சென்றிருப்பது ஏன்? கிராமப்புற மக்களின் ஊதியம் தொடர்ந்து சரிவதுடன், தேசிய வருவாயில் சம்பள விகிதம் குறைவது ஏன்?கடந்த 7 ஆண்டுகளில் அமைப்பு சாரா துறைகளில் 17 லட்சம் வேலை இழப்பு நடந்திருப்பது ஏன்? வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சமடைந்திருப்பது ஏன்?இவை அனைத்தும் வருகிற பட்ஜெட்டில் விடை காண வேண்டிய கேள்விகள் ஆகும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஜி20 நாடுகள் கோடீஸ்வரர்களுக்கு 2 சதவீத சொத்துவரி விதிக்க திட்டமிட்டு உள்ளன. இந்த மாத இறுதியில் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படுகிறது. இந்த கோடீஸ்வர வரி விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்தும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'இந்தியாவில் 167 டாலர் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 சதவீத சொத்து வரி வசூலித்தால் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கிடைக்கும். இது நமது ஜி.டி.பி.யில் கிட்டத்தட்ட 0.5 சதவீதம். இதை பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய முதலீட்டுக்கு பயன்படுத்தலாம்' என குறிப்பிட்டு உள்ளார். எனவே கோடீஸ்வர வரி விவகாரத்தில் உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரின் நிலைப்பாடு என்ன? ஜி20 மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்படும்போது இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்