
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க விடாமல் உங்களை யார் தடுத்தது..? ஜெய்சங்கருக்கு உமர் அப்துல்லா கேள்வி

கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டிருக்கலாம் என உமர் அப்துல்லா கூறினார்.
ஜம்மு:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று லண்டனில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது, காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ‛பாகிஸ்தான் திருடி ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும்' என்றார்.
இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிரொலித்தது. ஜெய்சங்கருக்கு காட்டமான கேள்விகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா பேசியதாவது:-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் பகுதியை நாங்கள் மீட்போம் என்று வெளியுறவுத்துறை மந்திரி கூறுகிறார். அவர்களை யார் தடுத்தது? அதனை மீட்க வேண்டாம் என்று எப்போதாவது நாங்கள் கூறினோமா?
கார்கில் போர் நடந்த சமயத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. மீட்டு எடுத்து இருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. இப்போது நீங்கள் அதனை மீட்டெடுக்க விரும்பினால் நாங்கள் யாராவது வேண்டாம் என்று கூறினோமா?
இதேபோல் ஜம்மு-காஷ்மீரின் வரைபடத்தை பார்த்தால், அதன் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. ஆனால் அதைப்பற்றி நீங்கள் பேசுவதில்லை.
எனவே, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்கும்போது, தற்போது சீனாவில் உள்ள ஜம்மு காஷ்மீரின் அந்த பகுதியையும் மீட்டெடுத்தால் நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.