மேற்கு வங்காளம்: வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கவுன்சிலர் மீது துப்பாக்கி சூடு; வைரலான வீடியோ
|மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரை கொலை செய்ய, பீகாரில் இருந்து ஆட்களை கூலிக்கு அமர்த்தி இருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் கஸ்பா என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷந்தா கோஷ் என்பவர் அவருடைய வீட்டு முன்பு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து இருந்துள்ளார். கொல்கத்தாவின் 108-வது வார்டு கவுன்சிலரான அவருடன் குடும்பத்தினர் உரையாடியபடி இருந்தனர்.
அப்போது, மர்ம நபர்கள் 2 பேர் ஸ்கூட்டர் ஒன்றில் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென கோஷை நோக்கி ஓடி சென்று கைத்துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார். ஆனால், அவருடைய கைத்துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. குண்டும் வெளிவரவில்லை.
இதனால் கோஷ் உயிர் தப்பினார். உடனடியாக அவர் எழுந்து, துரத்தி சென்று அந்நபரை பிடிக்க முயன்றார். அவர் நண்பரின் ஸ்கூட்டரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால், அதற்குள் ஸ்கூட்டர் கிளம்பி விட்டது. அதில் ஏற முடியாமல் ஓடிய அந்நபரை, கோஷ் துரத்தி செல்லும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்துள்ளன.
இறுதியில் அவரை பிடித்து, கோஷ் அடித்து உதைத்து, அவரை அனுப்பியது யார்? என கூறும்படி கேட்பது வீடியோவில் உள்ளது. அதற்கு அந்நபர், எனக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. புகைப்படம் ஒன்றை கொடுத்து, கொலை செய்யும்படி கூறப்பட்டது என்று அவர் கூறுகிறார். இதன்பின்பு, அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதுபற்றிய விசாரணையில், கவுன்சிலரை கொலை செய்வதற்கு, பீகாரில் இருந்து துப்பாக்கி சுடும் ஆட்களை கூலிக்கு அமர்த்தி இருக்கிறார்கள். உள்ளூர் நபர்கள் இதற்கு பின்னணியில் இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. கூலிக்கு அமர்த்திய நபர் யாரென தனக்கு தெரியவில்லை என்று கோஷ் கூறியுள்ளார்.