< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள பா.ஜ.க. அலுவலகத்தில் கொடூரம்; சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள பா.ஜ.க. அலுவலகத்தில் கொடூரம்; சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை

தினத்தந்தி
|
10 Nov 2024 2:55 AM IST

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. அலுவலகத்தில் சமூக ஊடக பிரிவு ஊழியர் உடல் கிடந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உஸ்தி நகரில் பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் உள்ளது. இதில், அக்கட்சி தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது. அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிருத்விராஜ் நஸ்கார் என்ற அந்த நபர் கட்சியின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றச்சாட்டை தெரிவித்தது. அக்கட்சியின் மாநில தலைவர் சுகந்த மஜும்தார் செய்தியாளர்களிடம் கூறும்போது, கட்சியினரை மிரட்டுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

அவர் கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி கூறுகிறது. இந்த சூழலில், போலீசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். தனிப்பட்ட பகைக்காக படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். நஸ்காரை ஆயுதம் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டார் என அந்த பெண் கூறினார் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்து, அதில் மோதல் ஏற்பட்டு இருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்றார். அந்த பெண்ணுக்கு யாரேனும் உதவி செய்தனரா? அல்லது தூண்டி விட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.ஜி. கார் மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் துர்கா பூஜையின்போது, போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததற்காக அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்தனர் என நஸ்காரின் தந்தை கூறியுள்ளார். இதுபற்றி போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்