அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் - அதானி கிரீன் எனர்ஜி விளக்கம்
|அமெரிக்காவில் லஞ்ச குற்றச்சாட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது.
மும்பை,
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது என்று கூறி நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக கவுதம் அதானி, சாகர் அதானி ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே முறைகேடு புகார் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை தலா 10 முதல் 28 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு அதானி கிரீன் நிறுவனம் சார்பில் இன்று கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பான அந்த கடிதத்தில், "அமெரிக்க நீதித்துறையும், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களான கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம் என்று எங்கள் துணை நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதனை தாங்களும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.