'அதுல் சுபாஷ் வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்' - பெங்களூரு காவல்துறை
|அதுல் சுபாஷ் வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் சுபாஷ்(34) என்பவர், பெங்களூருவில் உள்ள மஞ்சுநாத் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அதுல் சுபாஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதோடு, தனது முடிவிற்கான காரணம் குறித்து ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்துள்ளார். மேலும் ஒரு வீடியோவையும் பதிவு செய்து வைத்துள்ளார்.
இது குறித்து அவரது சகோதரர் பிகாஸ் குமார் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் மீது அதுல் சுபாஷின் மனைவி பல்வேறு பொய் வழக்குகளை தாக்கல் செய்ததாகவும், அதனால் அதுல் சுபாஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் என்றும் கூறியுள்ளார். அதுல் சுபாஷின் அறையில் போலீசார் சோதனை செய்தபோது, "நீதி கிடைக்க வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அதில் நாட்டில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் பொய் வழக்குகள் குறித்து அதுல் சுபாஷ் விமர்சித்துள்ளார். தன் மீது தனது மனைவி சுமத்திய வரதட்சனை கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை என்றும், தனது பெற்றோரை தயவு செய்து துன்புறுத்த வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் அதுல் சுபாஷ் எழுதியுள்ளார்.
அதுல் சுபாஷ் கடந்த 2019-ம் ஆண்டு திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அடுத்த ஆண்டே இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதன் பிறகு அதுல் சுபாஷிடம் அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் 2021-ம் ஆண்டு அவரது மகனை அழைத்துக் கொண்டு அதுல் சுபாஷின் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதுல் சுபாஷ் கடைசியாக பதிவு செய்த வீடியோ மற்றும் கடிதத்தில் பல சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக வரதட்சனையாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மனைவியை கொடுமை செய்ததால் தனது மாமனார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் தன் மாமனாருக்கு ஏற்கனவே 10 ஆண்டுகளாக இதய பாதிப்பு இருந்து வந்துள்ளது என்றும் அதுல் சுபாஷ் கூறியுள்ளார்.
அதே போல் குடும்ப நல நீதிமன்றத்தில் தங்கள் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடந்த சம்பவம் குறித்து அதுல் சுபாஷ் விளக்கியுள்ளார். அதில், "பொய் வழக்குகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று நீதிபதியிடம் நான் கூறினேன். அதற்கு என் மனைவி, 'நீ ஏன் இன்னும் தற்கொலை செய்யவில்லை?' என்று கேட்டார். இதை கேட்டு நீதிபதி சிரித்தார். பின் மனைவியை வெளியே போக சொல்லிவிட்டு, என்னிடம் இந்த வழக்கை தீர்த்து வைக்க 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார்" என்று அதுல் சுபாஷ் கூறியிருக்கிறார்.
மேலும் தனது மாமியார் ஒருமுறை தன்னிடம், "நீ ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை?" என்று கேட்டதாகவும், "நான் தற்கொலை செய்து கொண்டால் உங்களுக்கு யார் பணம் தருவார்கள்?" என்று கேட்டதற்கு, "உனக்கு பிறகு உன் தந்தை பணம் தருவார். உன் பெற்றோர் இறந்த பிறகு உன் மனைவிக்கு எல்லா பணமும் வந்து சேர்ந்துவிடும்" என்று தனது மாமியார் கூறியதாக அதுல் சுபாஷ் தெரிவித்திருக்கிறார்.
தனது மகனை சந்திக்கவும் மனைவியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அதுல் சுபாஷ், "நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னிடம் உள்ள பணத்தை பிடுங்கப் போகிறார்கள். அதற்கு நீதித்துறை அமைப்பும் துணையாக இருக்கிறது. நான் சென்ற பிறகு, பணமும் இருக்காது, என் பெற்றோரை துன்புறுத்துவதற்கான காரணமும் இருக்காது. எனது உடலை அழித்து அனைத்தையும் நான் காப்பாற்றுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, தனது வீடியோ பதிவை 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அதனை டொனால்டு டிரம்ப மற்றும் எலான் மஸ்க் ஆகியோருடன் அதுல் சுபாஷ் பகிர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அதுல் சுபாஷ் பேசிய வீடியோ வைரலாக பரவி, சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷின் மரணத்திற்கு காரணமான அனைவரின் மீதும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதுல் சுபாஷ் வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பெங்களூரு கமிஷனர் தயானந்தா கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுல் சுபாஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். இந்த வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.