நாங்கள் ஜம்மு-காஷ்மீரை விரும்புகிறோம்; அவர்களோ 370-வது பிரிவை விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய பிரதமர் மோடி
|மராட்டியத்தில் அரசியல் பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டு உள்ளது என்று பேசினார்.
நான்டெட்,
மராட்டியத்தில் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மராட்டியத்தின் நான்டெட் நகரில் நடந்த அரசியல் பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, நாம் ஜம்மு-காஷ்மீரை விரும்புகிறோம். ஆனால் அவர்கள் 370-வது பிரிவை விரும்புகிறார்கள் என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவு நீக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதம் கட்டுக்குள் உள்ளது.
லால் சவுக்கில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டதா? இல்லையா? லால் சவுக்கில் மக்கள் தீபாவளியை கொண்டாடினார்களா? இல்லையா? ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டு உள்ளது என்று பேசினார்.
370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் பிரதமர் மோடி இதனை பேசியுள்ளார். எனினும், இந்த தீர்மானத்திற்கு 29 உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க. அப்போது எதிர்ப்பு தெரிவித்தது.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வருவதற்காக பாகிஸ்தான், உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. எனினும், அதனை ஒருவரும் கவனிக்கவில்லை.
ஆனால், அவர்களுக்கு அடுத்து காங்கிரஸ் இந்த கொள்கையை கையிலெடுத்து உள்ளது. அதனை ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அவர்கள் திணிக்கிறார்கள். இதுபோன்ற காங்கிரசை நாம் மன்னிக்கலாமா? அவர்களை நீங்கள் தண்டிப்பீர்களா? இல்லையா? தேர்தலில் தோல்வியடைய செய்வீர்களா? இல்லையா? அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பீர்களா? இல்லையா? என்றும் அவர் கேட்டுள்ளார்.