வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின்சார கட்டணம் கிடையாது
|வயநாடு பகுதிகளில் இன்று 9-வது நாளாக மீட்பு பணி நடை பெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைக்கிராமங்கள் சின்னாபின்னமாகி விட்டது. நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு மண் மூடியும், உருக்குலைந்தும் காணப்படுகிறது.
நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளில் எஞ்சி இருக்கும் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். அங்குள்ள வீடுகளில் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து 9-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக 10 குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.