வயநாடு இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சத்யன் மோகேரி அறிவிப்பு
|வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
புதுடெல்லி,
மராட்டியம், ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் கமிஷன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி அங்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோகேரி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.