
வக்பு மசோதா.. அவர்கள் நினைத்ததை செய்துவிட்டார்கள்: கல்யாண் பானர்ஜி சாடல்

வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று இறுதி செய்துள்ளது. மொத்தம் 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கூறுகையில், "அவர்கள் (பாஜக) என்ன முடிவு செய்திருந்தார்களோ இன்று அதை செய்து விட்டார்கள். எங்களை பேச அனுமதிக்கவில்லை. எந்த விதிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
ஆவணங்கள் மற்றும் கருத்துகளை ஆரம்பத்தில் நாங்கள் கேட்டிருந்தோம். அவை எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு பிரிவு வாரியாக விவாதத்தைத் தொடங்கினர். முதலில் ஆலோசனை நடத்தும்படி நாங்கள் கூறினோம்.
ஆனால், கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் ஆலோசனையை அனுமதிக்கவே இல்லை. பின்னர் அவர் திருத்தம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீதும் நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. அவரே தீர்மானத்தை கொண்டு வந்து, உறுப்பினர்களின் ஆதரவை எண்ணி அறிவித்தார். அனைத்து திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. எங்கள் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன, அவர்களுடைய திருத்தங்கள் அனுமதிக்கப்பட்டன. இது ஒரு கேலிக்கூத்தான நடவடிக்கை. இன்று ஜனநாயகத்தின் கருப்பு நாள். ஜெகதாம்பிகா பால் ஜனநாயகத்தை அழித்துவிட்டார்" என குற்றம்சாட்டினார்.