< Back
தேசிய செய்திகள்
அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
தேசிய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
25 Nov 2024 11:00 AM IST

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற விவாதத்தில் அதிகமான எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். நாளை 75வது அரசியலமைப்பு தினம் நாடாளுமன்றத்தில் கொண்டாடப்படும். அரசியலமைப்பின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆக்கப்பூர்வமாக நடக்கும் என நம்புகிறேன். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். அவையில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் பலமுறை நிராகரித்துள்ளனர். மக்கள் அவர்களை (எதிர்க்கட்சிகளை) மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும்... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இரவு பகலாக கடினமாக உழைக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தின் நிபந்தனை.

மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்களும், சக ஊழியர்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியவர்களும், அவர்களின் உணர்வுகளை மதிக்காதவர்களும் சபையில் பணியை சுமூகமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விரும்புகின்றனர்.

நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் என்றுமே பேசியதில்லை. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குழைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் எப்போதும் செயல்பட்டதில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றனர்.

இன்று உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது, நாடாளுமன்றத்தின் நேரத்தைப் பயன்படுத்துவதும், சபையில் நமது நடத்தையும் உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மரியாதையை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்