ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடபோன் ஐடியா
|ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
டெல்லி,
இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களில் முதன்மையானவை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா. இதில் நேற்று முன் தினம் ஜியோ நிறுவனம் தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியது. செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவிகிதம் வரை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதனை தொடர்ந்து நேற்று மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 11 முதல் 21 சதவிகிதம் வரை உயர்த்தியது. இந்தியாவின் முக்கியமான இரு தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அதன்படி, 28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவுடன், அளவற்ற கால் வசதி, 300 எஸ்.எம்.எஸ். கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 179 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
84 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா, அளவற்ற கால் வசதி, 30 எஸ்.எம்.எஸ். கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 459 ரூபாயில் இருந்து 509 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ரீசார்ஜ் கட்டணத்தையும் வோடபோன் ஐடியா உயர்த்தியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.