வினேஷ் போகத் 140 கோடி மக்களின் இதயங்களில் சாம்பியனாக இருக்கிறார் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
|பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு 140 கோடி மக்களின் இதயங்களில் அவர் சாம்பியனாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 140 கோடி மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்.
இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்காத ஆற்றலை வினேஷ் போகத் வெளிப்படுத்தியிருக்கிறார்; அவரது மன உறுதியும், மீளும் திறனும் இந்தியாவில் இருந்து உருவாகும் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவித்து வருகிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.