< Back
தேசிய செய்திகள்
congress worker washing Patole feet
தேசிய செய்திகள்

மராட்டிய காங்கிரஸ் தலைவரின் கால்களை கழுவிய தொண்டர்.. வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
18 Jun 2024 6:07 PM IST

நானா படோலே தனது கால்களை கழுவ தொண்டரை பயன்படுத்தியது மிகவும் வெட்கக்கேடானது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

அகோலா:

காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில தலைவர் நானா படோலே, நேற்று அகோலா மாவட்டத்தின் வடேகான் பகுதிக்கு சென்றார். அப்போது, அவரது கால்களை காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், நானா படோலே காரின் முன்பக்க இருக்கையில் இருந்தபடி கால்களை நீட்டிக்கொண்டிருக்க, ஒருவர் தண்ணீர் ஊற்றி கழுவுகிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை மும்பை பா.ஜ.க. ஷேர் செய்து, நானா படோலேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நானா படோலே சேறு படிந்த தனது கால்களை கழுவ தொண்டரை பயன்படுத்தியது மிகவும் வெட்கக்கேடானது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஜாத்தும் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆட்சியில் இல்லாதபோதே மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்! தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? நானா படோலே மன்னிப்பு கேட்க வேண்டும்' என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நானா படோலே பதில் அளித்துள்ளார். புனித கஜானன் மகாராஜின் பாதச்சுவடுகள் ஊர்வலத்தில் பங்கேற்றபிறகு தனது கால்களில் சேறு படிந்ததாகவும், புறப்பட்டபோது அந்த இடத்தில் தண்ணீர் வசதி (குழாய்) இல்லாததால் தொண்டர் ஒருவர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்