சட்டசபை தேர்தலில் வெற்றி; மராட்டிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
|சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மராட்டிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதன்படி மராட்டிய மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மராட்டிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சி வெற்றி பெற்றுள்ளது. நாம் ஒற்றுமையுடன் இன்னும் பல உயரங்களை அடைவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்காக மராட்டிய மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பும், அரவணைப்பும் ஈடு இணையில்லாதது. மராட்டிய மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து உழைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.