< Back
தேசிய செய்திகள்
வந்தே மெட்ரோ ரெயில் சேவைக்கு நமோ பாரத் ரேபிட் ரெயில் என பெயர் மாற்றம்
தேசிய செய்திகள்

'வந்தே மெட்ரோ' ரெயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரெயில்' என பெயர் மாற்றம்

தினத்தந்தி
|
16 Sept 2024 2:32 PM IST

குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் 'வந்தே மெட்ரோ' ரெயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரெயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்,

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் குஜராத் பயணத்தின் போது, நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார். முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரெயிலாக 'வந்தே மெட்ரோ' ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது. 110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.

வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இதன்படி காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும் இந்த ரெயில். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும். இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் கட்டணம் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பயணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது. இந்த ரெயில் சனிக்கிழமை புஜ் நகரில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்தும் புறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்