சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
|சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
கடலூர் மக்களவை தொகுதி எம்.பி. விஷ்ணு பிரசாத் டெல்லியில், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார், மேலும் முத்துநகர் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களை திட்டக்குடி நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை, நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், "எனது சிதம்பரம் தொகுதி மக்களின் கீழ்க்கண்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கோயம்புத்தூர்- மயிலாடுதுறை (12083/84) ஜன சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20683/84) ரெயிலையும், சென்னை காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் (16175/76) ரெயிலையும், ராமேஸ்வரம் முதல் அயோத்தி கான்ட் (22613/64) ரெயிலையும் சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு புதிதாக காலையில் பயணிகள் ரெயில் இயக்கப்பட வேண்டும். சிதம்பரம் ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டும். பாண்டியன் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அரியலூர் மாவட்டத்தின் தலைமையகமான அரியலூரில் நிறுத்தப்பட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதி தி.மு.க. எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ரெயில்வே அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், "தென்காசியை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும். கீழப்புலியூர், பாவூர்சத்திரம், கீழ கடையம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் நடைமேடையின் நீளத்தை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம் - சென்னை வந்தே பாரத் புதிய ரெயிலை தென்காசி, ராஜபாளையம், மதுரை, விருத்தாச்சலம் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செ.ராபர்ட் புரூஸ் ரெயில்வே அமைச்சரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "மதுரை -பெங்களூர் (20671) வந்தே பாரத் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பதுடன், அதை திருச்சி வழியாக செல்லாமல் நேரடியாக நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும். திருநெல்வேலி -சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு கூடுதல் 8 பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.