கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு: உத்தரகாண்டில் அறிமுகம்
|33 சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தலைமைப்பண்பையும் ஊக்குவிக்கும் என அம்மாநில கூட்டுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்டில் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற மாநில கூட்டுறவுத்துறை மந்திரி டாக்டர். தன் சிங் ராவத்தின் முன்மொழிவுக்கு, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில், உத்தரகாண்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாநில அளவிலான கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்.
இந்த ஒதுக்கீடு குறித்து டாக்டர். தன் சிங் ராவத் கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடியின் 'கூட்டுறவு மூலம் செழிப்பு' என்ற மந்திரத்தின் மூலம், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் 33 சதவிகித பங்களிப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
நாட்டில் இந்த செயல்பாட்டினை அறிமுகம் செய்த முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். இந்த அறிவிப்பு பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இதன்மூலம், சமூகங்களில் பெண்களின் 33 சதவிகித பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தலைமைப் பண்பையும் ஊக்குவிக்கும்.
இது மற்ற மாநிலங்கள் பின்பற்ற ஒரு முன்மாதிரியாக இருக்கும். மேலும், கூட்டுறவு சங்கங்களில் ஆண்களின் ஆதிக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவர இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.